ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கையில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359க்கு அதிகரித்துள்ளது. காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்த பலர் இறந்ததால் அந்த எண்ணிக்கை கூடியதாக போலிசார் புதன்கிழமை தெரிவித்தனர். மருத்துவமனைகளில் 400 பேருக்கும் அதிகமானோர் இன்னும் உள்ளனர். நடந்ததற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த மாதம் கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசலில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தற்காப்பு துணையமைச்சர் ருவான் விஜயவர்த்தனே கூறினார்.
தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள், பலத்த பாதுகாப்புக்கு இடையே தொடர்ந்து நடக்கின்றன. இதன் தொடர்பில் மேலும் 18 பேர் கைது செய்யப்படவுள்ளனர். கைதானவர்களின் எண்ணிக்கை 60க்கு அதிகரித்துள்ளதாக போலிசார் கூறினர். மேலும் சில சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
தாக்குதல் பற்றிய புலனாய்வுத் தகவல்களை இலங்கை அதிகாரிகள் முன்கூட்டியே பெற்றிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் திரு ரணில் விக்ரமசிங்க செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

