இன்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நிகழ்த்தவுள்ள வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் நேற்று ரஷ்யாவை வந்தடைந்தார். கிம் தமக்குச் சொந்தமான கவச ரயில் வழி ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரை அடைந்த போது அதிகாரிகள் அவருக்கு ரொட்டியும் உப்பும் வழங்கி பாரம்பரிய முறையில் வரவேற்றனர்.
அணுவாயுதப் பிரச்சினை குறித்து இருவரும் கலந்துரையாடுவர் என்று கூறப்படுகிறது.
அண்மையில் கிம்மும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இரண்டாவது முறையாகச் சந்தித்துப் பேசியது தோல்வியில் முடிந்ததன் தொடர்பில் திரு கிம் ஆதரவு நாடுவதாகவும் ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.
இருதரப்பு உறவுகள், பொருளியல் ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவி, அணுவாயுதக் களைவு போன்ற விவகாரங்கள் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் பேசவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று நாட்களுக்கு நீடிக்கவுள்ள கிம்மின் பயணத்தின்போது ரஷ்ய கடற்படைத் தலைமையகம், உணவு தொழிற்சாலைகள், நீர்வாழ் விலங்குக் காட்சி சாலை போன்ற இடங்களுக்கு அவர் செல்லவிருப்பதாக தென் கொரிய தகவல்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து அமெரிக்கா தடைகள் விதித்தாலும் அழுத்தம் தந்தாலும் வேறு மாற்றுப் பாதையை நாடவேண்டியிருக்கும் என்று திரு கிம் தமது புத்தாண்டு உரையில் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்பில் ரஷ்யாதான் அந்தப் புதிய பாதையாக இருக்கக்கூடும் என்ற ஊகம் நிலவி வருகிறது.
ஆனால் திரு கிம்மின் ராஜதந்திர திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த கிம்-புட்டின் சந்திப்பு என்றும் சரியான சமயத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனுக்கு அவர் திரும்புவார் என்றும் அமெரிக்க நிபுணர்கள் கூறுகின்றனர்.

