ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 20,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 100க்கு மேற்பட்டோர் பணிச் சுமை மற்றும் சோர்வு காரணமாக மாண்டுள்ளனர். அவர்களில் காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். இதனை அந்நாட்டு பொதுத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. எனவே வருகிற தேர்தல்களில் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகளின் நலன் கருதி செயல்படுவதற்கு தேர்தல் பணிகள் குறித்து மறு ஆய்வு செய்யப்போவதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல், சட்டம், பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரான விராந்தோ, தேர்தல் பணிகளில் 139 அதிகாரிகள் இறந்தனர் என்றும் 500க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டனர் என்றும் உறுதி செய்தார். அந்நாட்டில் கடந்த 17ஆம் தேதி அதிபர் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் நடந்தன. 245,000 வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்தத் தேர்தலில் 193 மில்லியன் பேர் வாக்களித்தனர். முழுமையான தேர்தல் முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

