லண்டன்: பிரிட்டனின் 5ஜி கட்டமைப்புக்கு உதவ சீனாவின் ஹுவாவெய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உதவியை நாடுவதற்கு பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, பிரிட்டனின் தொலைத் தொடர்புத்துறைக்கு அனுமதி அளித்துள்ளார்.
ஹுவாவெய் தொலைத்தொடர்புச் சாதனங்கள் தேசிய பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பிரிட்டனின் 5ஜி கட்டமைப்புக்கு பங்களிக்க ஹுவாவெய் நிறுவனத்தை நாடுவதற்கு பிரதமர் தெரசா பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
பிரதமர் தெரசா மே தலைமையில் இயங்கும் பிரிட்டன் தேசிய பாதுகாப்பு மன்றம், 5ஜி கட்டமைப்புக்கு ஹுவா வெய் நிறுவனத்தின் உதவியை நாட இணங்கியுள்ளது.
அதற்கான ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக பிரிட்டனில் 40 ஒப்பந்தங்களில் ஹுவாவெய் கையெழுத்திட்டுள்ளது.
தெற்கு சீனாவில் உள்ள ஷென்ஸென் நகரில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்த '2019 அனைத்துலக ஆய்வாளர்கள் மாநாட்டில் அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு கென் ஹு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "2022ஆம் ஆண்டுக்குள் உலகத்தில் 500 மில்லியன் பேர் 5ஜி தொலைத்தொடர்புக் கட்டமைப்பைப் பயன் படுத்துவர்," என்றார்.
"ஐரோப்பாவில் 5ஜி கட்டமைப்பு, 5ஜி பாதுகாப்பு ஆகியவற்றை வெற்றிகரமாக பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். இதற்காக ஐரோப்பிய நாடுகளின் இணைய பாதுகாப்பு ஆணையங்களின் பரிந்துரைகளையும் வரவேற்கிறோம்," என்று சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
1987ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹுவாவெய் தொலைத்தொடர்பு நிறுவனம் முழுக்க முழுக்க அதன் ஊழியர்களால் நடத்தப்படும் நிறுவனமாகும்.
இந்நிறுவனம் 170 நாடுகளில் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் 180,000க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.

