மலேசியா - சீனா: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

மலேசியா - சீனா: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

2 mins read

பெய்ஜிங்: மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, சீனாவுடனான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திடுகிறார்.

நீண்ட காலமாக இழுபறியாக இருந்த மலேசியாவின் 'கிழக்குக் கடற்கரைப் பகுதி ரயில் பாதை' திட்டத்துடன் தொழில் பூங்கா, உள்கட்டமைப்பு, தளவாட மையங்கள் மற்றும் போக்குவரத்து மேம்பாடு ஆகிய திட்டங்களிலும் சீனாவும் மலேசியாவும் ஒருங்கிணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

மலேசியாவின் 'எம்ஐடிஏ' என்றழைக்கப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையமும் சீனா­வின் 'சிசிசிசி' என்றழைக்கப்படும் 'சைனா கம்யூனிகேஷன் கன்ஸ்ட்­ரக்ஷன் கம்பெனி'யும் இணைந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.

இதனை சீனாவில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரி நுரி­யாண்டி முகமது யாஸிட் நேற்று தெரிவித்தார்.

இருப்பினும் இது குறித்த மேல் விவரங்களை அவர் வெளியிட வில்லை.

சீன அரசுக்குச் சொந்தமான 'சிசிசிசி' நிறுவனமே மலேசியா­வின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் திட்டத்தின் முக்கிய ஒப்பந்த நிறுவன­மாகும்.

சீனாவின் 'ஒரே வர்த்தகப் பொருளியல் மேம்பாட்டுத் தட' திட்டத்தின் ஓர் அங்கமான இந்தத் திட்டம், மலேசிய அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாபெரும் உள்கட்டமைப்பு வசதி களை உள்ளடக்கிய திட்டங்களில் ஒன்று.

இந்தத் திட்டத்­தைக் கைவிடுவதாக கடந்த ஜூலை மாதம் மலேசியா அறிவித்­திருந்தது.

பின்னர் சீனாவுடன் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவில் இருந்து 30 விழுக்காடு குறைக்கப்பட்டு 44 பில்லியன் ரிங்கிட் செலவில் மீண்டும் இந்தத் திட்டத்தைத் தொடர இரு நாடுகளும் இணக்கம் கண்டன.

ஒப்பந்தத்தின் இரண்டாவது திட்டத்தின் மூலம் மலேசியாவில் உற்பத்தியாகும் பனை எண்ணெய் வர்த்தகம் மேம்படுத்தப்படும்.

மலேசி­யாவின் பனை எண்ணெய் வாரியமும் சீனாவின் உணவு, கால்நடை பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வர்த்தக சம்மேளனமும் இணைந்து இந்தத் துறைகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும்.

இதற்கான கையெழுத்துச்­சடங்கு இன்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, சீனப் பிரதமர் லி கெக்கியாங் ஆகியோர் முன்­னிலையில் பெய்ஜிங்கில் நடை­பெறும். மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது நான்கு நாட்கள் அதிகாரத்­துவப் பயணம் மேற்கொண்டு பெய்ஜிங் சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியும் சென்றுள்ளார்.

இந்த வருகையின்போது டாக்டர் மகாதீர், சீனாவில் உள்ள ஹுவாவெய் கைத்தொலைபேசி நிறுவனத்திற்கும் சென்ஸ் டைம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கும் வருகை புரிவார் என்று கூறப்படுகிறது.