வியட்னாமிய தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப்பைச் சந்தித்தபோது, அமெரிக்கா நயவஞ்சகத்துடன் நடந்துகொண்டதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினுடனான உச்சநிலைச் சந்திப்பின்போது திரு கிம் அவ்வாறு கூறியதாக தென்கொரிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
திரு புட்டினுடனான பேச்சுவார்த்தைகள் உச்ச ஒளிவுமறைவின்றி நட்பார்ந்த முறையில் நடந்ததாகத் தெரிவித்தார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ காரணம் எனக் குற்றம் சாட்டிய வடகொரியா, திரு டிரம்ப் அவரைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கோரியிருந்தது.
அமெரிக்கா தன்னிச்சையாகவே நயவஞ்சகப் போக்குடன் நடந்துகொண்டதால் இரு நாட்டு உறவு முன்பு இருந்ததுபோல் மோசமாகலாம் என்று திரு கிம் எச்சரித்தார்.
உச்சநிலை சந்திப்பின்போது, வடகொரியாவுக்கு வருகை அளிக்குமாறு திரு புட்டினுக்குத் திரு கிம் அழைப்பு விடுத்திருக்கிறார்.

