ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரைக் கண்டுபிடித்து அதன் தலைவர்களை வீழ்த்தப் போவதாக அமெரிக்கா சூளுரைத்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் காணொளி உரை ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டதை அடுத்து அமெரிக்கா அவ்வாறு கூறியுள்ளது.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வீழ்ச்சியை உறுதி செய்யவும் அதன் தலைவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கவும் அமெரிக்கா வழிநடத்தும் கூட்டணி உலகமெங்கும் போராடும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிரியாவிலுள்ள பகவுஸ் நகரில் தனது கிளர்ச்சிப் படையினர் தோல்வி கண்டதைப் பற்றிப் பேசிய பக்தாதி, இதற்காகப் பழிவாங்கப்போவதாக மிரட்டியுள்ளார். அத்துடன், இலங்கையில் 250 பேர் உயிரிழந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை நடத்தியவர்களை அவர் பாராட்டினார்.காணொளியின் உண்மைத்தன்மையை அமெரிக்க அரசாங்கப் புலனாய்வாளர்கள் ஆய்வு செய்வர் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக பக்தாதி இடம்பெறும் காணொளி ஒன்றை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கால்களை மடக்கிக்கொண்டு அமர்ந்திருந்த அவர், துப்பாக்கி ஒன்றைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பல்வேறு மிரட்டல்களை விடுத்துக்கொண்டிருந்ததை அந்த 18 நிமிடக் காணொளி காட்டியது.
ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ் தனது 'கலிஃப்' சாம்ராஜ்ஜியத்தை இழந்திருப்பதை அவர் காணொளியில் ஒப்புக்கொண்டார். இருந்தபோதும், அமெரிக்காவுக்கும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் எதிரான போராட்டத்தை ஐ.எஸ் கைவிடாது என அவர் சூளுரைத்தார்.மேலும், இஸ்ரேலியத் தேர்தல், சூடான், அல்ஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களின் வீழ்ச்சி உள்ளிட்ட பல விவகாரங்களைப் பற்றி அவர் காணொளியில் பேசியிருந்தார். ஈராக்கிற்கும் சிரியாவுக்கும் இடையிலான பாலைவனப் பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

