மகாதீர்: பிரதமரை மாற்றும் உரிமை மக்களுக்கே உள்ளது

மகாதீர்: பிரதமரை மாற்றும் உரிமை மக்களுக்கே உள்ளது

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் பிரதமரை மாற்றும் உரிமை மலேசிய மக்களுக்கு மட்டுமே உள்ளது என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார்.

சீனா சென்றுள்ள டாக்டர் மகாதீர் அங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் அண்மையில் கூறிய கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் மகாதீர், தன்னை பிரதமர் பதவியிலிருந்து மலேசியர் களால் மட்டுமே நீக்க முடியும் என்று கூறினார்.

முன்பு ஜோகூர் பட்டத்து இளவரசர் பதவி துறந்ததையும் அந்தப் பதவி அவரின் இளைய சகோதரருக்கு கொடுக்கப்பட்ட தையும் டாக்டர் மகாதீர் நினைவு கூர்ந்தார். "பட்டத்து இளவரசர் மாறலாம். ஆனால் பிரதமரை மாற்றுவது என்பது மக்கள் கையில் மட்டுமே உள்ளது. வேறு யாரும் பிரதமரை மாற்ற முடியாது," என்று டாக்டர் மகாதீர் கூறினார். ஒருவேளை பிரதமரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு இருந்தால் அவர் தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.

டாக்டர் மகாதீருக்கும் ஜோகூர் அரச குடும்பத்துக்கும் இடையில் உறவு ஏற்கெனவே சுமூகமாக இல்லை. இந்நிலையில் டாக்டர் மகாதீர் இவ்வாறு கூறியிருப்பது உறவை மேலும் பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் ஒரு காணொளியில் ஜோகூர் காற்பந்துக் குழுவின் பயிற்று விப்பாளர் பெஞ்சமின் மோராவை மாற்றுவதற்குப் பதிலாக பிரதமரை மாற்றுவது நல்லது என்று கூறியிருந்தார். இதற்கிடையே பிரதமர் குறித்து ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் கூறிய கருத்தை மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சயத் சதீக் சயத் அப்துல் ரஹ்மான் சாடியுள்ளார்.