மகாதீர்: தொழிலாளர் தினத்திலும் அமைச்சர்கள் வேலை செய்யவேண்டும்

மகாதீர்: தொழிலாளர் தினத்திலும் அமைச்சர்கள் வேலை செய்யவேண்டும்

2 mins read
1962c63e-9b44-4ad8-9221-87af7a0b4045
-

மற்றவர்களுக்குத் தொழிலாளர் தினம் ஓய்வு தினமாக இருந்தாலும் தமது அமைச்சர்களுக்கு அது வேலை தினமாக இருக்கும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது முடிவு செய்திருக்கிறார். தொழிலாளர் தினத்தன்று அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பிற்பகல் இரண்டு மணி முதல் தத்தம் அமைச்சுகளின் நடப்புகளைப் பற்றி டாக்டர் மகாதீர் முன்னிலையில் விளக்கவேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம். குலசேகரன், சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டுவாழ் மலேசியர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றின்போது பெர்னாமா நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூருக்குச் செல்லும் தமது மனைவியுடன் இந்நாளைக் கொண்டாட விரும்பியதாகவும் டாக்டர் மகாதீரின் இந்த முடிவால் அந்தக் கொண்டாட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டியுள்ளதாகவும் ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினரான திரு குலசேகரன் தெரிவித்தார். ஆசியான் மனிதவள அமைச்சருக்கான சிறப்புக்கூட்டம், வேலையின் எதிர்காலம் குறித்த ஆசியான் மனிதவள அமைச்சரின் கலந்துரையாடல் ஆகியவற்றுக்காகத் திரு குலசேகரன் சிங்கப்பூருக்கு வந்திருந்தார். திரு குலசேகரன் தனது அமைச்சுப்காக வேலை உருவாக்கம் குறித்த அறிக்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளார்.

டாக்டர் மகாதீரைப் பற்றிப் பேசிய திரு குலசேகரன், "இந்த ஏற்பாட்டிற்கு நாங்கள் உடன்படவில்லை எனச் சொல்ல விரும்பினோம். ஆனால் இந்த வயதில் அவர் நினைத்ததை நடத்தி முடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். என்ன நடக்கிறது என அறியாமல் நாங்கள் மலைத்திருந்தோம்," என்று கூறினார். அரசாங்கத்தின் உந்து சக்திகளில் ஒன்றாக டாக்டர் மகாதீர் திகழ்வதாகவும் அவர் ஒருவரின் உழைப்பு, மூன்று அமைச்சர்களுக்கு ஈடானது என்றும் திரு குலசேகரன் கூறினார். "ஒருவேளை அவர் தமது வயதைப் பற்றி எங்களிடம் பொய் சொல்லியிருப்பாரோ என்று சில சமயங்களில் நாங்கள் நினைத்ததுண்டு. அவருக்கு வெறும் 60 வயதுதான் என நினைக்கிறேன்," என்று நகைச்சுவையாகக் கூறிய திரு குலசேகரன், 93 வயது டாக்டர் மகாதீரின் கடின உழைப்பைப் பாராட்டினார்.