தலைமறைவாக இருக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியைக் காட்டும் ஆக அண்மைய காணொளி வெளி யாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் காணொளியின் நம்பகத்தன்மையை ஆராயும் பணியில் அதிகாரிகள் ஈடு பட்டு வருகின்றனர்.
கடந்த ஐந்தாண்டுகளாக பக்தாதியைக் காட்டும் காணொளிகள் வெளி வர வில்லை.
அதன் விளைவாக அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், அவரைக் காட்டும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பக்கத்தில் துப்பாக்கியுடன் அவர் சம்மணமிட்டு அமர்ந்து பேசுவதை அந்தக் காணொளி காட்டுகிறது. சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கடைசி நகரம் அல் பகூஸ் ஃபௌகானி.
தமது அமைப்புக்கு எதிராக சண்டை போடும் கூட்டணிப் படைகளிடம் அந்த நகரத்தை இழந்துவிட்டதாக பக்தாதி ஒப்புக்கொள்வதை அந்தக் காணொளி காட்டுகிறது.
அந்தக் காணொளி எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால் அது கடந்த மாதம் பதிவு செய்யப் பட்டதாக ஐஎஸ் தெரிவித்துள்ளது.
புர்கினா ஃபாசோ, மாலி ஆகிய நாடுகளிலிருந்து போராளிகள் ஐஎஸ் அமைப்புக்கு விசுவாசம் தெரிவித்திருப்பதாக பக்தாதி கூறுவதைக் காணொளி காட்டு கிறது.
சூடானும் அல்ஜீரியாவும் சர்வாதிகாரிகளால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அதற்கு ஜிஹாத் தான் தீர்வு என்றும் பக்தாதி கூறி னார். இருநாடுகளின் நீண்டகாலத் தலைவர்கள் கடந்த மாதத்தில்தால் தங்கள் பதவிகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காணொளியின் இறுதிக்கட்டத்தில் பக்தாதியைக் காட்டாமல் அவர் குரல் பதிவு மட்டும் ஒலிபரப்பப்பட்டது.
அதில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்களைப் புகழ்ந்து பேசினார்.
பக்தாதியின் காணொளி வெளியானதை அடுத்து, ஐஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரில் உயிர்பிழைத்த அந்த அமைப்பின் தலைவர்களையும் பக்தாதியையும் தேடிக் கண்டு பிடித்து வீழ்த்தப்போவதாக அமெரிக்கா சூளுரைத்துள்ளது.

