சோல்: அணுவாயுதக் களைவு பேச்சுவார்த்தையில் இவ்வாண்டு இறுதிக்குள் அமெரிக்கா தனது புதிய நிலைப்பாட்டை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் விரும்பத்தகாத விளைவுகளை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரியாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அணுவாயுதத்தை வடகொரியா கைவிடுவது தொடர்பில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சிங்கப்பூரிலும் வியட்னாமிலும் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும், உடன் பாடு எதுவும் எட்டப்படவில்லை.
தன்மீது விதிக்கப்பட்டுள்ள பொருளியல் தடைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என வடகொரியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அணுவாயுதத்தை முழுமையாகக் கைவிட்ட பின்னரே அதைச் செயல்படுத்த முடியும் என அமெரிக்கா கைவிரித்துவிட்டது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் அமெரிக்கா நீக்குப்போக்காக நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தி வரும் கிம், அதற்கு இவ்வாண்டு இறுதி வரை கெடு விதித்துள்ளார்.
ஆனால், அந்தக் கெடுவை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவும் நிராகரித்து விட்டனர்.
ஐக்கிய நாடுகள் (ஐநா) பாதுகாப்பு மன்றத்தின் தடைகளை மீறி பல்லாண்டு காலமாக அணுவாயுத, ராக்கெட் திட்டங்களைச் செயல்படுத்தி வந்த வடகொரியா, தான் உறுதி அளித்தபடி அணுவாயுதங்களைக் களைய உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

