கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இரு பள்ளிவாசல்களுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தி 50 பேரின் உயிரைக் காவு வாங்கிய துயரம் அடங்குவதற்குள், அங்கு இன்னொரு வெடிகுண்டு நேற்று கண்டெடுக்கப்பட்டது. காலி நிலத்தில் அந்தக் குண்டு கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கிறைஸ்ட்சர்ச்சின் மத்திய வர்த்தக வட்டாரத்தை அடுத்துள்ள ஃபிலிப்ஸ்டவுன் பகுதியில் உள்ள பல வீடுகளில் இருந்தும் சாலைகளில் இருந்தும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய அந்தப் பொட்டலம் ராணுவ வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்பில் 33 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைது செய்தது.
"நியூகாசல் ஸ்திரீட்டில் இருந்த ஒரு காலி நிலத்தில் வெடிகுண்டு இருந்த அந்தப் பொட்டலத்தை போலிசார் கைப்பற்றினர்," என்று கண்காணிப்பாளர் ஜான் பிரைஸ் தெரிவித்தார்.
சுயமாக தீவிரவாதப் போக்கிற்கு மாறிய ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் இரு பள்ளிவாசல்களுக்குள் நுழைந்து 50 பேரைச் சுட்டுக் கொன்றதை அடுத்து, கிறைஸ்ட்சர்ச் நகரம் தீவிர விழிப்புநிலையில் இருந்து வருகிறது.

