தோக்கியோ: முன்நிபந்தனைகள் எதுவும் இன்றி வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேச ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே விருப்பம் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு எது சிறந்தது என்பது திரு கிம்முக்கு நன்றாகவே தெரியும் என்று கூறிய திரு அபே, அவருடன் நிபந்தனையற்ற பேச்சு நடத்த தான் தயாராக இருப்பதாகக் கூறினார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் திரு கிம் இரண்டாவது முறையாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தநிலையில் ஜப்பானியப் பிரதமர் அபே, வடகொரியத் தலைவரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தை கைவிட இத்தகைய சந்திப்பு வழிவிடும் என்று ஜப்பானியப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அணுவாயுதங்களைக் கைவிட வடகொரியா எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் திரு கிம் சென்ற மாதம் ரஷ்ய அதிபர் புட்டினை சந்தித்துப் பேசினார்.

