மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுக்கும் ஜோகூர் மாநிலப் பட்டத்து இளவரசர் இஸ்மைல் இப்ராஹிம்முக்கும் இடையிலான மோதலை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் முஹ்யிடின் யாசின் மட்டுப்படுத்திப் பேசியுள்ளார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைமையிலுள்ள அரசாங்கம் மலேசியாவின் மாநில மன்னர்களுடன் நல்லுறவைப் பாராட்டுவதாக அவர் கூறினார்.
"மலேசிய மன்னர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவு என்றுமே நன்றாக உள்ளது... ஒரு சில சம்பவங்களால் நல்லுறவு இல்லை என்று அர்த்தமில்லை," என்று திரு யாசின் கூறினார். "மலேசிய சமுதாயத்தில் மன்னர்களுக்கு உள்ள பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நல்லபிமானத்தைப் புரிந்திருக்கிறோம். எனவே, இந்தச் சமுதாய நடைமுறைக்கு எதிராக பக்கத்தான் ஹரப்பானின் அணுகுமுறை முரண்பட்டிருக்காது," என்றும் அவர் சொன்னார்.
டாக்டர் மகாதீருக்கும் ஜோகூர் அரச குடும்பத்திற்கும் இடையிலான சொற்போரை அடுத்து திரு யாசினின் கருத்துகள் வெளிவந்தன. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு உடன்பட மலேசிய அரசாங்கம் முன்னர் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிக் கொண்டது, மாநிலப் பதவியேற்புகளை முடிவெடுப்பது யார் உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் மூண்டன.

