ஒப்பந்தத்தில் இணையச் செய்வதற்காக சீனாவுக்குத் தரப்படும் நெருக்குதலை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெகுவாக அதிகரித்திருக்கிறார். 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்படும் வரியை இவ்வாரத்திற்குள் உயர்த்தப்போவதாக அவர் கூறினார். மேலும் நூறு பில்லியன் டாலர் பெறுமானமுள்ள சீன ஏற்றுமதிகளுக்கும் இவ்வாறு செய்யப்போவதாக அவர் எச்சரித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவு சுமுகமாக உள்ளது என்று கடந்த வெள்ளிக்கிழமை கூறிய திரு டிரம்ப், திடீர் திருப்பமாக இவ்வாறு கூறியுள்ளதால் அந்த உறவில் பதற்றநிலை மேலும் கூடியுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி அடையுமா என்பது குறித்த ஐயப்பாடுகள் அதிகரிக்க, பங்குச் சந்தை விலைகளும் எண்ணெய் விலைகளும் சரிந்தன.
திரு டிரம்ப் இவ்வாறு பேசியதால் சீனா அதிர்ச்சி அடைந்ததாகவும் இவ்வாரம் நிகழவிருந்த சீனா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து சீனா பின்வாங்கலாம் என்றும் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழும் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' சஞ்சிகையும் தெரிவித்தன.

