பாகிஸ்தானின் ஆகப் பழமையும் பிரபலமும் உடைய சூஃபி புனிதத்தலங்களில் ஒன்று குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு நேற்று குறிவைக்கப்பட்டது. பாகிஸ்தானின் கிழக்கு நகரான லாகூரில் புனித ரமலான் மாதத்தின்போது நடந்துள்ள இச்சம்பவத்தில் ஐந்து போலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 25 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் போலிசார் கூறினர்.
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'டேட்டா தர்பார்' புனிதத்தலத்திற்குப் பெண்கள் செல்லக்கூடிய வாசல் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டது. தாக்குதல் தொடர்பில் இன்னமும் விசாரணை நடத்தி வருவதாக போலிசார் தெரிவித்தனர். இதே புனிதத்தலம் ஏற்கெனவே 2010ஆம் ஆண்டில் தற்கொலைப்படை தாக்குதலுக்குக் குறிவைக்கப்பட்டிருந்தது.
40 உயிர்களைப் பலிகொண்ட அச்சம்பவத்தைத் தொடர்ந்து அவ்விடம் பலத்த பாதுகாப்பில் இருந்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் குழு உட்பட பயங்கரவாத அமைப்புகளால் தாக்குதல்களுக்கு அடிக்கடி குறிவைக்கப்பட்டு வருபவர்கள் சூஃபி முஸ்லீம்கள். இறந்த இஸ்லாமிய துறவிகளை வழிபடும் சூஃபி நம்பிக்கைகளையும் சமயச் சடங்குகளையும் இந்த அமைப்புகள் வெகுவாக எதிர்க்கின்றன.

