ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்படவிருக்கும் அரசியல் கட்சி, ஜோகூர் பட்டத்து இளவரசர் இத்ரிஸ் இஸ்கந்தரோடு இணைந்து பணியாற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டத்து இளவரசர் இத்ரிஸ் 15வது பொதுத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால், தமது கட்சி அவரோடு இணைந்து பணியாற்றும் என பார்ட்டி பேட்ரியோட்டிக் நேஷனலின் (பிபிஎன்) தலைமைச் செயலாளர் முகம்மது சுல்கிஃப்லி அப்துல் ஃபத்தா தெரிவித்தார்.
கட்சியைப் பதிவுசெய்ய மனு செய்யப்பட்டிருப்பதாகவும் இம்மாத இறுதிக்குள் அதன் பதிவு கிடைத்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தரின் இரண்டாவது புதல்வரான இத்ரிஸ் இஸ்கந்தர், தாம் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடும் எனத் தமது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

