தெரேசா மே: 'லிவர்பூலைப் போல மீண்டு வருவேன்'

தெரேசா மே: 'லிவர்பூலைப் போல மீண்டு வருவேன்'

1 mins read
44ec1bad-8934-4e79-98d2-4295e96bc79f
-

லிவர்பூல் காற்பந்து குழு வியக்கத்தக்க வகையில் பார்சிலோனா அணியை வென்றது போல் தாமும் பின்னடைவுகளிலிருந்து மீண்டெழுந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் ஜெயிக்கப் போவதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற பிரிட்டன் முற்பட்டிருக்கையில், நல்ல ஒப்பந்தத்துடன் வெளியேற பாடுபடும் திருமதி மே, தமது சொந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்து வருகிறார். ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் வெளியேறும் வைராக்கியத்துடன் இருப்பவர்கள் ஒரு பக்கம், இந்த வெளியேற்றம் நிகழவே கூடாது என்று நினைப்பவர்கள் மறுபக்கம். நாடாளுமன்றத்திலுள்ள இத்தகையோரால், ஒப்பந்தம் எட்ட திருமதி மே எடுக்கும் முயற்சிகளில் தொடர்ச்சியாகத் தொய்வுகள் ஏற்பட்டுள்ளன.

அனைவரும் ஒன்றிணைந்தால் 'பிரக்சிட்' நிச்சயமாக வெற்றியடையும் என்றார் திருமதி மே. ஆனால், பிரிட்டனின் அரசியலில் திருமதி மேயின் பதவி விலகல் எப்போது நிகழும் என்பது குறித்துதான் பேச்சே!

இதில் என்ன வேடிக்கை என்றால், 'பிரக்சிட்' முடிவில் எந்த நியாயமும் இல்லை என்று லிவர்பூலைச் சேர்ந்த ஜெர்மானிய நிர்வாகி யுர்கன் கிலோப் தெரிவித்திருக்கிறார். அவரது நிலைப்பாடாவது தெளிவாக இருக்கிறது என்று பிரிட்டிஷ் செய்திக் கட்டுரை ஒன்று நகைச்சுவையாகக் கூறியது.