முஸ்லிம்களை எழுப்பும் போர் விமானங்கள்

முஸ்லிம்களை எழுப்பும் போர் விமானங்கள்

1 mins read
a7151756-dca8-4ec4-bde6-4c54b558ea66
-

ஜகார்த்தா: புனித ரமலான் மாதத்தில் அதிகாலையில் நோன்பு நோற்கும் முஸ்லிம்களைச் சஹர் உணவுக்காக எழுப்பிவிடப் போர் விமானங்களைப் பறக்கவிடப் போவதாக இந்தோனீசிய ஆகாயப் படை அறிவித்துள்ளது.

ஜாவாத் தீவில் உள்ள பல்வேறு நகர்களில், குறிப்பாக சுரபாயா, சுரகர்த்தா, யோக்யகர்த்தா உள்ளிட்டவற்றில் போர்க்காலப் பயிற்சி நடத்தப்படும் என்று அந்நாட்டு ஆகாயப் படை டுவிட்டரில் குறிப்பிட்டது.

நோன்பு நோற்கும் வேளையில் ஆகாயப் படை வீரர்கள் பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக ஆகாயப் படையின் கர்னல் எம்.யூரிஸ் கூறினார்.

ஆகாயப் படை வீரர்கள் பயிற்சி செய்வதற்கு விடியற்காலை பொழுதே சரியான நேரம் என்று மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். காலை 10 மணிக்குப் பிறகு பயிற்சி செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நோன்பு நோற்கும்போது உடலின் ரத்த சர்க்கரை அளவு குறைவதே அதற்குக் காரணம்.

அதிகாலையில் முஸ்லிம்களை எழுப்பிவிட அதிக சத்தத்தை எழுப்பும் போர் விமானங்கள் குறைவான உயரத்தில் பறக்கும். விடியற்காலையில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி திட்டம் இந்தோனீசிய ஆகாயப் படையால் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் 'எஃப்-16' மற்றும் 'டி50ஐ' ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.