அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்படவேண்டும் என்று கூறும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு முன்பிருந்ததைவிட 5 விழுக்காடு புள்ளிகள் உயர்ந்து 45 விழுக்காடாக இருப்பதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்தாய்வு குறிப்பிடுகிறது. ஆனால் கருத்தாய்வில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், திரு டிரம்ப்புக்கு எதிராக அடுத்தடுத்து நிகழும் நாடாளுமன்ற விசாரணைகள் முக்கியமான அரசாங்கப் பணிகளைப் பாதிப்பதாகக் கருதுகின்றனர்.
திரு டிரம்ப் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் சோதனைகளால் அமெரிக்கர்கள் அலுத்துப்போய் இருப்பதாகக் குறிப்பிடுகிறது சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற இந்தக் கருத்தாய்வு. எனினும், விசாரணைகள் அனைத்தும் அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டங்களுக்கும் உண்மைத் தகவல்களுக்கும் உட்பட்டிருக்கவேண்டும் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு தேர்தலில் ரஷ்யா டிரம்ப்புடன் நேரடியாக ஒத்துழைத்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணையின்மூலம் நிரூபனமானது. இதனை அடுத்து திரு டிரம்ப்பின் வர்த்தகம், குடும்ப உறுப்பினர்கள் என அவரைச் சார்ந்த பல்வேறு விவகாரங்களை மும்முரமாக ஆராய்ந்து வருகின்றனர் ஜனநாயகக் கட்சியினர்.

