பேச்சுவார்த்தை நடக்கும்போதே உயர்த்தப்பட்ட சீன இறக்குமதி வரிகள்

பேச்சுவார்த்தை நடக்கும்போதே உயர்த்தப்பட்ட சீன இறக்குமதி வரிகள்

1 mins read
dc4ecc64-ae32-461f-858e-ec96a658fa5e
-

அமெரிக்க வர்த்தகர்களுக்கும் சீன வர்த்தகர்களுக்கும் இடையிலான இரு நாள் பேச்சுவார்த்தைகளின் முதல் நாள் நிறைவடைந்துள்ளது. பில்லியன் டாலர் பெறுமானமுள்ள சீன இறக்குமதிகளின் மீது அமெரிக்கா வர்த்தக வரிகளை உயர்த்தப்போவதாக ஞாயிற்றுக்கிழமை திரு டிரம்ப் மிரட்டியதை அடுத்து சீனா, தானும் பதில் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறியது.

அமெரிக்காவின் நிதியமைச்சர் ஸ்டீவன் மினுச்சின், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லைட்டிஸர், சீனத் துணைப்பிரதமர் லியூ ஹே ஆகியோர் நேற்று கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்குப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அவர்கள் இந்தக் கலந்துரையாடலை இன்று தொடர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அடுத்த முறை இவர்கள் கூடுவதற்குள் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளின் வரிகளை அமெரிக்கா 10 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காட்டுக்கு அதிகரித்திருக்கும்.

நேற்றைய பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசாமல் சென்றுவிட்டனர்.

வர்த்தக வரிகளை உயர்த்துவது இரண்டு தரப்பினருக்கும் பாதகமே என்று பேச்சுவார்த்தைக்கு முன்னர் திரு லியூ, அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆனால் திரு டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் சாத்தியமில்லை என்றால் அமெரிக்கா பழையபடி பொருட்களைச் சொந்தமாகத் தயாரிக்கவேண்டும் என்றார்.