மலேசியாவின் குற்றவியல் தண்டனைச் சட்டங்களில் இடம்பெறும் தேசவிரோதச் செயல் சட்டம் ரத்து செய்யப்படும் அல்லது அதற்கு மாற்றுச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
இருந்தபோதும், அரச குடும்பத்தினரைப் பாதுகாக்கும் அவதூறு தொடர்பான சட்டங்கள் நீடித்திருக்கும் என்று பிரதமர் பிரிவைச் சேர்ந்த அமைச்சர் லியூ வூய் கியோம் தெரிவித்தார். பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்காலத்தின் ஓர் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தேசவிரோதச் செயல் சட்டத்தின் ரத்தால் மலேசியாவில் கருத்துச் சுதந்திரம் கூடும் எனக் கூறினார்.
"தேசவிரோதச் சட்டத்திற்கான அர்த்தத்தைத் தற்போதைய சட்டம் குறுகலாகக் கொண்டுள்ளது. அனைத்து வாக்கியங்களும் தேச விரோதமாகக் கருதப்படக் கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். குறிப்பிட்ட வாசகங்களுக்கு ஓரளவுக்குச் சுதந்திரம் வழங்கப்படலாம்," என்றார் திரு லியூ.
"அரசாங்கத்திற்கு எதிரான குறைகூறல்கள் ஆக்கபூர்வமாக இருந்தால் எங்களுக்குப் பாதகமில்லை," என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

