அனைத்துலக வர்த்தகத் தடைகளை மீறியதன் பேரில் வடகொரிய சரக்குக்கப்பலைப் பறிமுதல் செய்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. வடகொரியா நேற்று இரு குறுந்தொலைவு ஏவுகணைகளைப் பாய்ச்சியதை அடுத்து கப்பல் குறித்த விவகாரம் புதிதாக மூண்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் 'த வைஸ் ஹானஸ்ட்' என்ற அந்தக் கப்பலை இந்தோனீசியா தடுத்து தன்னிடம் ஒப்படைத்ததாக அமெரிக்காவின் சட்ட அமைச்சு தெரிவித்தது. நிலக்கரியைக் கொண்டுசெல்ல இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளிவந்தது.
வடகொரியக் கப்பல் ஒன்றை அமெரிக்கா பறிமுதல் செய்தது இதுவே முதல்முறை.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இருமுறை சந்தித்தபோதும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. கப்பலின் பறிமுதலால் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ள ஏவுகணைகளின் பாய்ச்சல் குறித்து யாரும் மகிழ்ச்சியில் இல்லை என்றாலும் தாம் இந்த விவகாரத்தை நன்கு ஆராய்ந்து வருவதாகத் திரு டிரம்ப் கூறினார். "சீனாவைப் போலத்தான் வடகொரியாவும். உடன்பாடு எட்டும் தருவாயில் அதன் நிபந்தனைகளை வடகொரியா திடீரென மாற்றுகிறது," என்றார் அவர்.

