டெஹ்ரான்: அனைத்துலகத் தடைகளால் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு ஈரான் நெருக்குதலை எதிர்நோக்கு வதாக ஈரானிய அதிபர் ஹசானி ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா விதித்த புதிய தடைகள் நாட்டின் பொருளியலை பெரிதும் பாதிக்கும் என்று அவர் கூறினார்.
அமெரிக்கா சென்ற வாரம் போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் வளைகுடாப் பகுதிக்கு அனுப்பியதால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரானிய அதிபர் இவ்வாறு கூறி யுள்ளார்.
உள்நாட்டில் அரசியல் நெருக்குதலை எதிர்நோக்கும் திரு ரவ்ஹானி, அனைத்துலகத் தடைகளை சமாளிக்க அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
1980களில் ஈராக்-ஈரான் சண்டையின்போது ஈரானில் ஏற்பட்ட பாதிப்புகளை அவர் தற்போது நினைவுகூர்ந்தார்.
ஈரானுடன் அனைத்துலக நாடுகள் 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து சென்ற ஆண்டு அமெரிக்கா விலகியது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தன்னிச்சையாக எடுத்த அந்த முடிவைத் தொடர்ந்து ஈரான் மீது பல பொருளியல் தடைகளை அவர் விதித்தார்.

