தரையிறங்கத் தத்தளித்த விமானம்; பெரும் விபத்து தவிர்ப்பு; பயணிகள் பத்திரம்

மியன்மாரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதுர்யமாக தரையிறக்கியதற்காக விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

அந்த மியன்மார் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றுக் காலை மண்டலே விமான நிலை யத்தில் தரையிறங்க முற்பட்ட போது அதன் தரையிறக்க விசை வேலை செய்யவில்லை. அதன் காரணமாக விமானத்தின் முன் சக்கரங்கள் வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது. 

அதனால் எரிபொருளைக் குறைக்க விமானத்தை கூடுதல் நேரம் வானில் பறக்கவிட்டார் விமானி. மேலும் அவ்விமானம் இருமுறை விமான நிலையத்தைக் கடந்து சென்று திரும்பியது. 

முன்சக்கரங்கள் வெளியேற வில்லை என்பதை ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உணர்த்த அவர் அவ்வாறு செய்தார். எரிபொருள் குறைந்து விமான எடை குறைந்த பின்னர் பின் சக்கரங்களைத் தரையில் உரசச் செய்து மூக்குப் பகுதியை இறக்குவதை காணொளி படங்கள் காட்டின. ஓடுபாதையில் மூக்குப் பகுதியால் சிறிது தூரம் விமானம் ஓடியதன் காரணமாக புகை எழுந்ததையும் அந்தப் படத் தில் காண முடிந்தது.

அதிர்ச்சியில் உறைந்திருந்த 82 பயணிகளும் 7 ஊழியர்களும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும் நிம்மதிப் பெருமூச்சுடன் விமானத் திலிருந்து வேகமாக வெளியேறிச் சென்றனர்.