சவூதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதாக அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் காலிட் அல்-ஃபாலி தெரிவித்திருக்கிறார். ஐக்கிய அரபு சிற்றரசுகளிலுள்ள ஃபுஜைராவின் கடற்பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், உலக எண்ணெய் விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என திரு அல்-ஃபாலி வர்ணித்திருக்கிறார்.
கச்சா எண்ணெய்யை ஏற்றிச்செல்ல அவ்விரு கப்பல்களில் ஒன்று 'ராஸ் தனூரா' துறைமுகத்திற்குச் சென்றுகொண்டிருந்ததாகத் திரு அல்-ஃபாலி தெரிவித்தார். அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு அந்த எண்ணெய் கொடுக்கப்படவேண்டியிருந்தது.
இந்தத் தாக்குதலால் எண்ணெய்க் கசிவு ஏற்படவில்லை. எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதனை நடத்தியவர்கள் யார் என்பது தற்போது தெளிவாக இல்லை.

