வியட்னாமில் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்

வியட்னாமில் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்

1 mins read
e7b691a1-c9ad-4ccc-8858-e8958c38def8
-

ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1.2 மில்லியனுக்கும் அதிகமான பன்றிகள் வியட்னாமில் கொல்லப்பட்டுள்ளன. அந்நாட்டில் பன்றிக் காய்ச்சல் கிருமி வேகமாகப் பரவி வரும் நிலையில் பண்ணையாளர்கள், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டுள்ள பன்றிகளைக் கொன்று குவிக்கின்றனர்.

வியட்னாமியர்கள் உண்ணும் இறைச்சிகளில் முக்கால் பங்கு பன்றி இறைச்சியாக உள்ளது. பிப்ரவரியில் ஆப்பிரிக்கப் பன்றி வகைகளில் காய்ச்சல் கிருமி வியட்னாமில் பரவி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கிருமி, இதுவரை 29 மாநிலங்களுக்குப் பரவியுள்ளது. வியட்னாமிய தலைநகர் ஹோ சீ மின்னில் சாப்பிடப்படும் பன்றி இறைச்சியில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு, பாதிகப்பட்ட மாநிலங்களில் ஒன்றான 'டோங் நை' மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

நோய்ப்பரவல் தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மாநில அரசாங்கங்களின் நிதிப் பற்றாக்குறை இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நோய், மனிதர்களை ஒன்றும் செய்யாது. ஆனால், பாதிக்கப்படும் பன்றிகளைக் குணமடையச் செய்யும் எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தப் பன்றிக் காய்ச்சல் பரவல் தொடர்பில் தேசிய அவசர நிலையை அறிவிக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு, வேளாண்மை அமைப்பு வியட்னாமுக்கு ஆலோசனை விடுத்துள்ளது.