பேங்காக்: சர்ச்சைக்குரிய தேர்தல் விதிமுறை மாற்றத்துக்குப் பிறகு தாய்லாந்தில் உள்ள 11 சிறு கட்சிகளுக்குத் தலா ஒரு நாடாளு மன்றத் தொகுதி கிடைத்தது.
இதையடுத்து, ராணுவத் தலைவர் பிராயுட் சான் ஓ சாவை ஆதரிப்பதாக இந்தக் கட்சிகள் நேற்று அறிவித்தன.
இதன் விளைவாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள திரு பிராயுட்டுக்கு போதுமான வாக்குகள் உள்ளன.
2014ஆம் ஆண்டில் திரு பிராயுட் தலைமையிலான தாய்லாந்து ராணுவம் ஆட்சி கவிழ்ப்பு நடத்தியதை அடுத்து, இவ்வாண்டில்தான் முதன்முதலாக தேர்தல் நடத்தப்பட்டது.
திரு பிராயுட் ஆட்சியைக் கைப்பற்ற தேர்தல் ஆணையம் உதவுவதாக எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
"எங்களுக்குள் கலந்து உரையாடிய பிறகு, திரு பிராயுட் சான் ஓ சாவை ஆதரிக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். அவரது பாலாங் பிரசாரத் கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைக்க வேண்டும்," என்று 11 சிறு கட்சிகளும் தெரிவித்தன.

