அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் சீ ஜின்பிங்கை அடுத்த வாரம் சந்திக்கவிருக்கிறார். உலகின் ஆகப் பெரும் பொருளியல்களுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றநிலை இதுவரையில்லாத அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் சந்திக்கவுள்ளனர்.
200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன இறக்குமதிகள் மீதான வர்த்தக வரிகளை உயர்த்த அமெரிக்கா கடந்த வாரம் முடிவு செய்ததை அடுத்து சீனாவும் பதிலுக்குச் சில அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை ஏட்டிக்குப் போட்டியாக உயர்த்தியது. அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு வரும் 5,140 இறக்குமதி பொருட்கள் மீது 5 விழுக்காடு முதல் 25 விழுக்காடு வரையிலான வரிகளை விதிக்கப்போவதாக சீன நிதியமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது.
மேலும் 300 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள சீன இறக்குமதிகள் மீது 25 விழுக்காடு வரை வரியை உயர்த்துவது குறித்து பொது கலந்துரையாடல் நடத்தப்போவதாக அமெரிக்காவின் வர்த்தக அலுவலகம் தெரிவித்தது.
ஜூன் மாத பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் 'ஜி20' உச்சநிலை சந்திப்பின்போது திரு சீயிடம் பேசப்போவதாகத் திரு டிரம்ப் தெரிவித்தார்.

