இலங்கையில் பல்லாண்டுகளாகச் செயல்பட்டு வந்த பிரிவினைவாத அமைப்பான 'தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்' இயக்கம் மீதான தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
'விடுதலைப்புலிகள்' இயக்கத்தை ஆதரிக்கும் சில இயக்கங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருவதாகவும் இலங்கையில் 'தனி ஈழம்' அமைப்பதற்கான முயற்சியை அந்த இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் உள்துறை அமைச்சு தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
1991ஆம் ஆண்டு 'விடுதலைப்புலிகள்' இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி உயிரிழந்ததை அடுத்து அந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
இதற்கிடையே, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளால் இலங்கையில் அதிகரித்துள்ள பயங்கரவாத மிரட்டலை எதிர்கொள்ள இலங்கை இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. புலனாய்வு, வெடிகுண்டு களைவு, இணையத் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றுக்காக இந்தியாவின் ஒத்துழைப்பை நாடியிருப்பதாக இலங்கையின் ராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனானாயக்க உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

