சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்காவில் ஹுவாவெய்யை டிரம்ப் தடை செய்யக்கூடும்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனப் பெருந்தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவெய்யை அதிபர் உத்தரவு வழியாகத் தடை செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய நிறுவனங்களின் தொலைத்தொடர்புச் சாதனங்களின் பயன்பாட்டை இந்த உத்தரவு தடை செய்யும் என்று இது பற்றி விவரமறிந்த மூன்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

உத்தரவில் எந்த நாடுகளும் நிறுவனங்களும் குறிப்பிடப்படமாட்டா என்றனர் அந்த அதிகாரிகள். இந்த உத்தரவு சுமார் ஓராண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டிருந்ததாகவும் அது மீண்டும் தள்ளிவைக்கப்படலாம் என்றும் அவர்கள் கூறினர்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் பதற்றநிலையில் இருக்கும் இந்நேரத்தில் அதிபர் உத்தரவு குறித்த இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. ஆயினும், சீனாவுடனான இந்த மோதலை “சிறிய வாக்குவாதம்” என்று திரு டிரம்ப் வர்ணித்திருக்கிறார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறியவில்லை என்றும் அவர் கூறினார். 

“பல்லாண்டுகளாக சீனா எங்களை நியாயமற்ற முறையில் நடத்தி வருவதால் எங்களுக்குள் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது,” என்று திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த வாரம் இவ்விரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது அமெரிக்கா, சீன இறக்குமதிகள் மீதான வரியை உயர்த்தியது. பதிலுக்குச் சீனா, அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரியைத் திங்கட்கிழமை உயர்த்தியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon