இன்ஸ்டகிராம் கருத்துக்கணிப்பால் தற்கொலை செய்த இளம்பெண்

இன்ஸ்டகிராம் கருத்துக்கணிப்பின் முடிவுகளால் இளம்பெண் ஒருவர் தனது சொந்த உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தை விசாரிக்க மலேசிய அரசியல்வாதிகள் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். தான் உயிர் வாழ்வதா அல்லது தற்கொலை செய்துகொண்டு இறப்பதா என்பது குறித்து இன்ஸ்டகிராம் தளத்தில் கருத்துக்கணிப்பை தொடங்கி வைத்தார் அந்த 16 வயது பெண். அந்தக் கருத்துக்கணிப்பில் வாக்களித்தவர்களில் 69 விழுக்காட்டினர் அந்தப் பெண் மடியவேண்டும் எனத் தெரிவு செய்தனர்.

இவ்வாறு வாக்களித்திருந்தவர்கள் அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு துணைபுரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படலாம் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான திரு ராம்கர்பால் சிங் தெரிவித்திருக்கிறார். மலேசிய சட்டத்தின்படி தற்கொலை செய்ய வயதில் குறைந்தவர்களுக்கு துணைபுரிவோருக்கு மரண தண்டனை அல்லது இருபது ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மலேசியாவின் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் சையது சதீக் கேட்டுக்கொண்டுள்ளார். இளையர்கள் எதிர்நோக்கும் மனநலப் பிரச்சினைகளும் உயர்ந்துவரும் தற்கொலை விகிதமும் கூடுதலாக கவனிக்கப்படவேண்டும் என்று அவர் கூறினார்.