இணையத் தகவல் களஞ்சியத்தளமான விக்கிபீடியாவின் மீதான தடையை அனைத்து மொழிப் பதிப்புகள் மீதும் சீனா விரிவுபடுத்தியுள்ளது. கடந்த மாதம் சீனா இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக 'ஓஓஎன்ஐ' என்ற இணையக் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மொழிக் கட்டுரைகள் மீதும் தடை விதிக்கப்பட்டபோதும், மற்ற மொழிகளைக் காட்டிலும் சீன மொழியில் இருக்கும் கட்டுரைகளின் மீதே அந்நாட்டு அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக சீனாவின் தணிக்கை நடவடிக்கையைக் கண்காணிக்கும் 'கிரேட்ஃபைர்.ஆர்க்' அமைப்பு கூறியது.
2004ஆம் ஆண்டிலிருந்து விக்கிபீடியா அவ்வப்போது சீனாவில் தடை செய்யப்பட்டு வருவதாக விக்கிபீடியா தளத்தை நடத்திவரும் விக்கிமீடியா அறக்கட்டளை தெரிவித்தது. "இந்தத் தடையால் சீனாவிலுள்ள மில்லியன் கணக்கான வாசகர்கள், தொண்டூழியக் கட்டுரை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கல்விமான்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் இனி விக்கிபீடியாவின் வளங்களைப் பெற முடியாது. அவர்கள் தங்களது அறிவையும் சாதனைகளையும் இந்தத் தளத்தின் மூலம் உலகத்தோடு பகிர முடியாது," என்று அறக்கட்டளையின் வர்த்தகத் தொடர்பு நிர்வாகி சமந்தா லியன் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
விக்கிபீடியாவில் நிகழும் கலந்துரையாடலில் ஒரு நாடு சேர முடியாதபோது அது உலகத்திற்கே பேரிழப்பு என்று அவர் கூறினார்.
கூகல், ஃபேஸ்புக், த நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்களை சீனாவின் இணையத் தணிக்கை அதிகாரிகள் ஏற்கெனவே தடை செய்திருக்கின்றனர்.

