ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் லாபிஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இம்மாதம் உரையாற்றிய பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரை ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் சாடியுள்ளார்.
தெனாங் ஸ்டேஷன் பள்ளிவாசலில் லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹோக் லியோங் உரையாற்றியது தொடர்பாக ஜோகூர் சுல்தானிடம் புகார் செய்யப்பட்டது.
ஜோகூரில் உள்ள பள்ளிவாசல்களில் அரசியல் நடவடிக்கைகள் நடத்தப்படக்கூடாது என்பதை சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
திரு பாங் பள்ளிவாசலில் உரையாற்றியதால் லாபிஸ் நகரில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்லாது, ஜோகூர் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களும் அதிருப்தி அடைந்திருப்பதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
பள்ளிவாசலின் புனிதத்தன்மையை திரு பாங் கெடுத்துவிட்டதாகவும் மாநிலத்தின் அதிகாரபூர்வ சமயம் என்று இஸ்லாம் கொண்டிருக்கும் அந்தஸ்துக்கு மிரட்டல் விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பள்ளிவாசலில் உரையாற்றியபோது அரசியல் தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசவில்லை என்று மலேசியகினி செய்தி நிறுவனத்திடம் திரு பாங் கூறினார். முஸ்லிம்கள் வைக்கும் ரமலான் மாதத்தில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அங்கு சென்றிருந்ததாக அவர் கூறினார்.

