ஆசியாவின் முதல் ஓரினத் திருமண மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதா என்பது குறித்து தைவான் முடிவெடுக்க உள்ளது. இதனை ஆதரிக்கும் வகையில் அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் பழமைவாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
மசோதாவை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் தைப்பே நகரிலுள்ள நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்டு அதன் முடிவுக்காகக் காத்திருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ளாமல் தடுக்கும் சட்டம் தைவானின் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 2019ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதிக்குள் இந்த மாற்றம் செய்யப்படவேண்டும் அல்லது அந்தத் தடை தாமாகவே நீக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

