நியூயார்க்: போயிங் நிறுவனத்தின் '737 மேக்ஸ்' ரக விமானங்களில் மென்பொருள் புதுப்பிப்புப் பணிகள் (அப்டேட்) அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தோனீசியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் லயன் ஏர் விமானமும் எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் மாதம் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானமும் விபத்துக்கு உள்ளானதையடுத்து போயிங் '737 மேக்ஸ்' ரக விமானங்கள் சேவையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
விமானங்கள் மீண்டும் சேவைக்குத் திரும்புவதற்குமுன் அமெரிக்கா மற்றும் அனைத்துலக விமான ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். விமானச் சேவையைத் தொடங்குவதற்கு நிர்வாகத்திடமிருந்து ஒப்புதல் பெறும் வகையில் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பிற்குக் கூடுதல் தகவல்களை போயிங் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

