வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் தீவிரம் அடைந்துவரும் பதற்றநிலையால் போர் மூண்டால், அது ஈரானின் பேரழிவுக்கு இட்டுச் செல்லக் கூடும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கவேண்டாம் என்றும் அவர் ஈரானுக்கு டுவிட்டர் மூலம் நேற்று முன்தினம் எச்ச ரிக்கை விடுத்தார்.
"ஈரான் எங்களுடன் போர் புரிய விரும்பினால், ஈரான் அதோடு முடிந்துவிடும். அமெ ரிக்காவை ஒருபோதும் அச்சு றுத்த முடியாது," என்று அவர் பதிவிட்டார்.
அண்மைய காலமாகவே வளைகுடா நாடுகளுக்கு அமெ ரிக்கா போர்க்கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத் தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா என்ற அச்சம் நீடித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையிலான மோதலை தணிக்க அண்மையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் திரு டிரம்ப் இப்போது விடுத்திருக்கும் மிரட்டல் அதற்கு முரணாக அமைகிறது.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரா னுக்கும் இடையிலான சர்ச்சை பெரும் பூசலாக வெடிக்க தாம் விரும்பவில்லை என்று சில நாட்களுக்கு முன்பாகத்தான் அவர் கூறியிருந்தார்.

