மலாக்கா ஆற்றில் நூற்றுக்கணக்கான இறந்த மீன்கள்

மலாக்கா ஆற்றில் நூற்றுக்கணக்கான இறந்த மீன்கள் மிதந்து கொண்டிருந்ததாக மலேசிய ஊடகங்கள் கூறியுள்ளன. அந்த ஆற்றுக்குள் எறியப்பட்ட தொழிற்சாலை நச்சுப்பொருட்கள் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நச்சுப்பொருட்கள் குறிப்பாக எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று மலாக்கா மாநிலத்தின் சுகாதாரச் செயற்குழுவின் தலைவர் லோ சீ கியோங் தெரிவித்தார்.

“இந்தத் தூய்மைக்கேடு, ஆற்றில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்குப் பரவியுள்ளது. இறந்த மீன்கள் ஆற்றின் அடியில் மூழ்குவதற்கு முன்னர் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,” என்று ஆற்றைப் பார்வையிட்ட திரு லோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இறந்த மீன்கள் ஆற்றின் கீழ்  மூழ்கி ஆற்றுத்தரையில் படிந்தால் அதன் தண்ணீரைப் பயன்படுத்துபவர்கள் சுகாதார அபாயங்களுக்கு உள்ளாகலாம் என்றும் அவர் கூறினார். 

இந்தச் செயல் மன்னிக்க முடியாதது என்று கண்டித்த திரு லோ, இச்சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு எதிராக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.