இலங்கையில் பெருகும் பொய்ச் செய்திகள்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தது முதல் பொய்ச் செய்திகள் வெகுவாகப் பெருகியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டகிராம், வாட்சப் உள்ளிட்ட தளங்களை இலங்கை அரசாங்கம் ஒன்பது நாட் களுக்குத் தடை விதித்தபோதும் பொய்ச் செய்திகளின் பரவல் தணிந்தபாடில்லை. தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இலங்கையின் தீவிர இணையவாசிகள் மெய்நிகர் தனியார் இணையக் கட்டமைப்பு வழியாக சமூக ஊடகங்களுடன் இணைகின்றனர். இதன் வழியாக பொய்ச் செய்திகளை இணையவாசிகள் படிப்பதாகக் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் தடை வேலை பயனளிக்கவில்லை என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றன. பொய்ச் செய்திகள் குறைவதற்கு மாறாக அதிகரித்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம் பெண்களுக்குரிய ‘புர்கா’ ஆடையை அணிந்திருந்த ஆடவர் ஒருவர் ஈஸ்டர் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது போலக் காட்டும் காணொளி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே இந்தக் காணொளி 2018ஆம்ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சின்னத்தைக் கொண்ட கறுப்பு நிற டி-சட்டைகளை அணிந்திருந்த இந்திய இளையர்களைக் காட்டும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படத்தையொட்டி மற்றொரு பொய்ச் செய்தி சமூக ஊடகங்களில் வலம் வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு பெளத்த சமயத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள், சிறு பான்மையினரான முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள சினத்தை இந்தப் பொய்ச் செய்திகள் அதிகப்படுத்துகின்றன.