குவந்தான்: மலேசிய மாமன்னர் அப்துல்லா ரி'அயாத்துடினின் தந்தையான முன்னாள் பாஹாங் சுல்தான் அகமது ஷா (படம்) நேற்று காலை காலமானார். அவ ருக்கு வயது 88.
காலை 8.50 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய சிகிச்சை மையத்தில் அவர் இறந்ததாக பாஹாங் மாநில முதலமைச்சர் வான் ரொஸ்டி நேற்று அறிவித்தார்.
அண்மை காலமாகவே சுல்தான் அகமது ஷா நோய்வாய்ப்பட்டு இருந்தார். கடந்த ஜனவரி 12ஆம் தேதி, பாஹாங் மாநில சிம்மாச னத்தை சுல்தான் அப்துல்லாவிற்கு சுல்தான் அகமது ஷா விட்டுக் கொடுத்தார். மலேசியாவின் அடுத்த மாமன்னராக சுல்தான் அப்துல்லா அரியணை ஏறுவதற்கு அந்த பதவி மாற்றம் வழிவகுத்தது.
1930ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி பெக்கானில் உள்ள மாங்கா துங்கால் அரண்மனையில் பிறந்த சுல்தான் அகமது ஷா, சுல்தான் அபு பக்கருக்கு மூன்றா வது பிள்ளையாவார்.
தந்தையின் மரணத்தையடுத்து 1974ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி, மலேசியாவின் ஆகப் பெரிய மாநிலமான பாஹாங்கின் ஐந்தாவது சுல்தானாக அவர் அரியணை ஏறினார்.
1975ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி, நாட்டின் துணை மாமன்னராக நியமிக்கப்பட்டார். பிறகு, 1979 முதல் 1984ஆம் ஆண்டு வரை நாட்டின் மாமன்ன ராக சுல்தான் அகமது ஷா பதவி வகித்தார்.

