பயண ஆலோசனையை வெளியிட்ட எட்டு நாடுகள்; பொய்ச் செய்திகளால் மேலும் பதற்றம்

சிங்கப்பூர் உள்ளிட்ட எட்டு நாடுகள், இந்தோனீசியாவுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்குப் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளன. இந்தோனீசியாவில் புதன்கிழமை தொடங்கிய கலவரத்தைத் தொடர்ந்து கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தோனீசியாவுக்குச் செல்லும் தங்கள் குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குண்டூர் சக்தி தெரிவித்திருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஃபிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளும் இதே முடிவை எடுத்துள்ளன. ஆயினும் இந்நடவடிக்கையால் இந்தோனீசிய சுற்றுப்பயணத் துறைக்குப் பாதிப்பு ஏற்படாது என நம்பிக்கை அவர் தெரிவித்தார்.

புதன்கிழமை தொடங்கிய அந்தக் கலவரத்தில் ஆறு பேர் மாண்டனர். அவர்களில் நால்வர் கத்திக்குத்து காயங்களுக்குப் பலியானதாக இந்தோனீசிய போலிசார் தெரிவித்திருந்தனர். அத்துடன் 200 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். கலவரத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பொதுச்சொத்து நாசச் செயல்களின் தொடர்பில் 150க்கும் அதிகமானோர் கைதானார்கள். இவர்களில் சிலர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என போலிசார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, இந்தோனீசிய சீனர்களுக்கு எதிரான வன்முறையும் பொய்ச்செய்திகளும் இந்தப் பதற்றமிக்கக் காலத்தில் அதிகரித்து வருவதாக ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. ‘வெளிநாட்டு ஊழியர்கள்’ என்ற போர்வையில் சீனா பாதுகாப்பு அதிகாரிகளை இந்தோனீசியாவுக்கு அனுப்பியுள்ளதாகச் சில இணையச் செய்திக் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய சீனர்கள் கலவரத்தின்போது இந்தோனீசியர்களைச் சுட்டுக்கொன்றதாகக் குறிப்பிடும் ஆதாரமற்ற செய்திகளால் மக்கள் பலரின் ஆத்திரம் தூண்டப்படுவதாக ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ குறிப்பிட்டது.