ஜோகூர் பாருவில் தாக்கப்பட்ட சீனாவைச் சேர்ந்த ஏமாற்றுக்காரப் பெண்கள்

ஜோகூர் பாருவில் தாக்கப்பட்ட சீனாவைச் சேர்ந்த ஏமாற்றுக்காரப் பெண்கள்

1 mins read
8a5cfcde-9d73-419c-8495-53123898d9ee
-

ஜோகூர் பாருவின் தாமான் மேகா ரியா சந்தையில் மூதாட்டி ஒருவரை ஏமாற்றியதாகக் கூறப்படும் சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அடித்துத் தாக்கப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது. உருக்குலைந்து காணப்பட்ட அவ்விரு சீனப் பெண்களும், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் அமர்ந்திருந்ததை அந்தக் காணொளி காட்டுகிறது. அவர்கள் தங்களைக் கேலி செய்யும் சீன வாசகங்களைக் கொண்ட அட்டையைக் கைகளில் பிடித்துக்கொண்டிருந்தனர். ஓர் ஆடவர் அவர்களைத் தடியால் அடிப்பதையும் அந்த மூன்று நிமிடக் காணொளி காட்டியது. இன்னும் பலர் அவர்கள் மீது பழங்களையும் முட்டைகளையும் வீசி எறிந்ததைக் காணொளி காட்டியது. இந்தச் சம்பவம் நடந்துள்ளதைத் துணைப் போலிஸ் அதிகாரி ஷாருல் அனுவார் உறுதி செய்தார். அந்தச் சீனப் பெண்கள் மூதாட்டி ஒருவருக்குப் போலி மருந்து கொடுத்து அவரிடமிருந்து ரொக்கத்தையும் நகைகளையும் பெற்றுள்ளதாகத் திரு ஷாருல் கூறினார். மூதாட்டி ஏமாந்ததை அறிந்த கடைக்காரர்கள், சந்தேக நபர்களை மீண்டும் கண்டபோது அவர்களைத் தாக்க ஆரம்பித்ததாக அவர் சொன்னார். சந்தேக நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக திரு ஷாருல் தெரிவித்தார்.