கோலாலம்பூர்: மலேசியாவில் பட்டக்கல்வியை முடித்தவர்களுக்குப் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைப்பது சிரமமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2010க்கும் 2017ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஊழியரணியில் சேரும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை ஈடுசெய்ய போதிய உயர் திறன் வேலைகள் உருவாக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட காலகட்டத்தில் பட்டய, பட்டக்கல்வி முடித்த 173,457 பேர் ஒவ்வோர் ஆண்டும் ஊழியரணியில் சேர்ந்தனர். ஆனால் அதே பருவத்தில் 98,514 உயர் திறன் வேலைகள் மட்டும் உருவாக்கப்பட்டதாக மலேசியாவின் மத்திய வங்கி கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில், ஒரு வேலையில் சேருவதற்குப் பட்டக்கல்வி மட்டும் போதாது எனக் கூறும் நிறுவனங்களின் முதலாளிகள், அனுபவமும் தேவைப்படுவதாக தெரிவித்தனர். ஆனால், வாய்ப்புக் கொடுத்தால் மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கும் அனுபவத்தைப் பெற முடியும் என்பது பட்டதாரிகள் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

