சாவ் பாவ்லோ: பிரேசிலின் அமசான் பகுதியிலுள்ள மனாயஸ் எனும் நகரில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் நான்கு சிறைகளில் அடுத்தடுத்துக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்த அமைந்துள்ளன.அதற்கு முந்தைய நாளன்று சிறைக் கைதிகளுக்கிடையே மூண்ட மோதலில் 15 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
திடீர் கலவரம் தொடர்பாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
பிரேசிலில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சிறை அறைகளில் இரு மடங்கு கைதிகள் அடைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் அமசோனஸ் மாகாணத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் உள்ளது. இதனால் அங்கு குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அங்குள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கைதிகள் மோதிக்கொள்ளும் இதே போன்ற சம்பவம் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது. வடக்கு மற்றும் வடகிழக்குப் பிரேசிலில் மூன்று வாரங்கள் நீடித்த வன்முறையில் கிட்டத்தட்ட 150 கைதிகள் உயிரிழந்தனர்.

