அமைச்சர்: மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவுகளை அனுப்பும் பங்ளாதேஷ்

அமைச்சர்: மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவுகளை அனுப்பும் பங்ளாதேஷ்

2 mins read
525de37d-a05e-4fef-970d-9b6e5b4d79f7
-

கிள்ளான்: பங்ளாதே‌ஷில் இருந்து மிகவும் துல்லிய முறையில் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அந்நாட்டின் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்துள்ளார்.

பங்ளாதே‌ஷிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டதாக நம்பப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கிள்ளான் துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட திருமதி இயோ மேற்கண்டவாறு கூறினார். இந்தக் கழிவுகள் ஒன்பது கொள்கலன்களில் மலேசியாவிற்குள் கொண்டு வரப்பட்டன. கொள்கலனில் மறுசுழற்சி செய்ய முடியாத குறுந்தட்டுகளை வைத்து அவற்றுக்கு முன் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளைச் சம்பந்தப்பட்டவர்கள் வைத்துள்ளனர்.

"இச்செயல் எனக்கு மிகவும் அதிர்ச்சியை அளிக்கின்றது. நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள்தான் இதுபோன்ற பாதகமான செயல்களைச் செய்வர்," என்று திருமதி இயோ வேதனை தெரிவித்தார்.

இதுபோக, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 50 கொள்கலன்களில் சோதனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட 450 டன் எடை கொண்ட கழிவுகள் மீண்டும் பங்ளாதே‌ஷிற்கே அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாது ஜப்பான், பிரிட்டன், சவூதி அரேபியா, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்தும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3,000 டன் எடையிலான கழிவுகளையும் திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் இயோ தெரிவித்தார்.

இதற்கிடையே பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கடந்த ஈராண்டுகளில் மட்டும் மலேசியாவிற்கு ஏறத்தாழ 5,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அனுப்பியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

"வளர்ச்சி அடைந்த நாடுகள் அங்குள்ள குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதே நேரம் அதனைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தவிர்க்க வேண்டும்," என்று திருமதி இயோ கேட்டுக்கொண்டார்.