மகாதீர்: மலாய்க்காரர்களின் ஆதரவு என்றென்றும் தேவை

மகாதீர்: மலாய்க்காரர்களின் ஆதரவு என்றென்றும் தேவை

1 mins read
41f6c1da-46fd-47b5-a3f3-55a7cb62fe91
மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது. மே 9ஆம் தேதியன்று புத்ராஜெயாவிலுள்ள அதிகாரபூர்வ பிரதமர் இல்லத்தில் எடுக்கப்பட்ட படம். -

மலேசியாவின் அடுத்த பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெல்லவேண்டுமானால் இனம் குறித்த தனது நிலைப்பாட்டை வாக்காளர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கவேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார். மண்ணின் மைந்தர்களாகக் ('பூமிபுத்ரா') கருதப்படும் முஸ்லிம் மலாய் இனத்தவர்களின் ஆதரவு பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களுக்கு என்றென்றும் தேவைப்படும் என டாக்டர் மகாதீர், அந்தக் கட்சியின் மத்திய கூட்டத்திற்குப் பிந்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். "இனம் குறித்த நமது நிலைப்பாட்டை வாக்காளர்களிடம் விளக்கத் தவறினால் நாம் அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று நான் நினைக்கிறேன்," என்றார் அவர். மலேசிய கல்வியமைச்சின் 'மெட்ரிகியுலேஷன்' திட்டத்தில் 90 விழுக்காட்டு இடங்களை 'பூமிபுத்ரா'க்களுக்காகத் தொடர்ந்து ஒதுக்கும் முடிவு கடுமையாகக் குறைகூறப்பட்டதை அடுத்து டாக்டர் மகாதீரின் கருத்துகள் வெளிவந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.