உலகின் ஆகச்சிறிய குழந்தை வீடு திரும்பியது

உலகின் ஆகச்சிறிய குழந்தை வீடு திரும்பியது

1 mins read
808ca108-499b-474d-8350-67932e8cc200
மருத்துவமனையில் தாதி ஒருவர் சேபியை ஏந்தியிருக்கிறார். படம்: ஏஎஃப்பி -

சாண்டியாகோ: கடந்த டிசம்பர் மாதம் குறைப் பிரசவத்தில் பிறந்த உலகின் ஆகச்சிறிய பெண் குழந்தை ஆரோக்கியத்துடன் வீடு திரும்பி உள்ளது.

சேபி என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தையின் எடை பிறக்கும் போது 245 கிராம். 23 வாரங்கள், மூன்று நாட்களிலேயே சேபி பிறந்துவிட்டார்.

இதனால் சேபி உலகின் ஆகச் சிறிய குழந்தையாக இருக்கலாம் என்று கலிஃபோர்னியாவின் சான் டியகோவில் உள்ள ஷார்ப் மேரி பிர்ச் தாய், சேய் மருத்துவமனை தெரிவித்தது.

சேபி பிறந்தவுடன் ஒரு மணி நேரத்துக்கு மேல் உயிர் பிழைக்க மாட்டார் என்று தந்தையிடம் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால் ஒரு மணி நேரம் என்பது இரண்டு மணி நேரமாகி, ஒரு நாளாகி, வாரங்களாகிவிட்டன. சேபி நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை வெளியிட்ட காணொளியில் குழந்தையின் தாயார் கூறினார்.

தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு கடும் பிரசவ சிக்கல்கள் ஏற்பட்டதால் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித் தனர்.

கடந்த ஐந்து மாதங்களாக சேபி தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் வீடு திரும்பியபோது அவரது எடை 2.2 கிலோ.