ஹுவாவெய்க்கு ஆதரவுக்கரம் நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர்

ஹுவாவெய்க்கு ஆதரவுக்கரம் நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர்

2 mins read
ca873135-42b4-463f-86a2-3354139ce8d1
மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது. -

தோக்கியோ: சீனாவின் ஆகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்யின் சாதனங்களை சீனா உளவு வேலைகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி அந்நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மேலும் அந்த நிறுவனத்தை பயன்படுத்த வேண்டாம் என்று உலக நாடுகளை டிரம்ப் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக நெருக் கடியில் சிக்கியுள்ள ஹுவாவெய் நிறுவனத்துக்கு மலேசிய பிரதமர் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார்.

தோக்கியோவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய டாக்டர் மகாதீர், அமெரிக்கத் தொழில் நுட்பங்களைவிட மிகச்சிறந்த முன்னேற்றங்களை வழங்கும் ஹுவா வெய்யை எந்த அளவுக்கு தேவை யோ அந்த அளவுக்குப் பயன்படுத்துவோம் என்று கூறி யுள்ளார்.

ஹுவாவெய் சாதனங்களைப் பயன்படுத்துவதால் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இருந்தாலும் இந்தப் பிரச்சினைகள் மலேசியாவை தடுத்துவிடாது என்றார் அவர்.

"ஆமாம், உளவு வேலைகள் இருக்கலாம், ஆனால் மலேசி யாவை உளவு பார்க்க என்ன இருக்கிறது, நாங்கள் வெளிப் படையாக இருக்கிறோம், இதனால் ஹுவாவெய் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் பயன்படுத்து வோம்.

"மலேசியாவுக்குள் ஏதாவது ஒரு நாடு ஊடுருவ விரும்பினால் தாராளமாக நுழையலாம். நாங்கள் எதிர்க்க மாட்டோம். அப்படி எதிர்த்தால் அது காலத்தை விரயமாக்கும் செயல் என்பது எல்லோருக்குமே தெரியும்," என்று 93 வயது மகாதீர் சொன்னார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையே வர்த்தகப் பூசல் இருப்பதை ஆமோதித்த டாக்டர் மகாதீர், ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கென்று சொந்த பலம் இருக் கும், சிறப்பாக செயல்பட முடியாத மற்ற துறைகளில் நுழையக்கூடாது என்று வலியுறுத்தினார்.

"அமெரிக்கா நீண்டகால மாகவே ஆய்வு, மேம்பாட்டில் ஆற்றலுடன் திகழ்ந்துவந்துள்ளது.

"தற்போது கிழக்கு நாடுகளில் இந்த ஆற்றல் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பெரும்பாலான நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து ஏழை நாடுகளில் முதலீடு செய்ததால் அந்நாடு வளர்ச்சி அடைந்தது. ஜப்பானும் குறைந்த செலவில் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதைக் காட்டி மற்ற நாடுகளுக்கு விற்று வந்தது," என்று மலேசிய பிரதமர் தெரிவித்தார்.