தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மெக்சிகோ ஏற்றுமதிகளுக்கு வரி விதிப்பதில் தனக்குப் "பிரச்சனையில்லை" என்கிறார் டிரம்ப்

1 mins read
c4563a52-4a26-4e25-9511-f1b49abb09df
-

அமெரிக்காவின் தென் எல்லைப்பகுதி வழியாகச் சட்டவிரோதக் குடியேறிகள் நுழைவதன் தொடர்பில் இவ்வாரம் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், அமெரிக்காவுக்கான மெக்சிகோ ஏற்றுமதிகளுக்குச் சுங்க வரி விதிப்பதில் தனக்கு "எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

குடிநுழைவு பற்றியும் எல்லையைக் கடக்கும் மக்களைத் தடுக்க மெக்சிகோ நடவடிக்கை எடுக்காவிட்டால் அதன் ஏற்றுமதிகளுக்குப் படிப்படியாக உயரும் சுங்க வரியை விதிக்கப்போவதாக டிரம்ப் விடுத்த மிரட்டல் பற்றியும் பேசுவதற்காக மெக்சிகோ அரசாங்கம் புதன்கிழமை (ஜூன் 5) வாஷிங்டனுக்குப் பேராளர் குழுவை அனுப்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

"எல்லாரும் மெக்சிகோ வழியாக வருகிறார்கள், போதைப்பொருட்கள் உட்பட, ஆட்கடத்துவோர் உட்பட," என்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையிலிருந்து பிரிட்டனுக்குப் புறப்படுகையில் திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் சொன்னார்.

"நாங்கள் இதைத் தடுத்து நிறுத்தப் போகிறோம் அல்லது தொழில் செய்வதை நிறுத்தப் போகிறோம், அவ்வளவுதான். இது செய்யப்படாவிட்டால், நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை," என்றார் அவர்.

சென்ற அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை 530,000க்கும் அதிகமான கள்ளக் குடியேறிகள் அமெரிக்க எல்லையைக் கடந்தபிறகு பிடிபட்டனர் அல்லது அமெரிக்காவுக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்று சுங்கத்துறை, எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.