ஆஸ்திரேலிய துறைமுகத்துக்கு வருகை தந்த 3 சீனப் போர்க்கப்பல்கள்

ஆஸ்திரேலிய துறைமுகத்துக்கு வருகை தந்த 3 சீனப் போர்க்கப்பல்கள்

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்துக்கு மூன்று சீனப் போர்க்கப்பல்கள் திடீரென வருகை புரிந்ததால் பரபரப்பு நிலவியது. சிட்னியில் உள்ள துறைமுகத்துக்கு நேற்று காலை அந்த சீன போர்க்கப்பல்கள் வந்ததைத் தொடர்ந்து அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சாலமன் தீவுகளுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட திரு மோரிசன், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். சீன போர்க்கப்பல்களின் வருகை நட்பின் அடிப்படையிலானது என அவர் அப்போது குறிப்பிட்டது, பதற்றத்தைச் சற்று தணிக்கும் விதமாக அமைந்தது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியப் போர்க்கப்பல்கள் சீனா சென்று திரும்பியதை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது ஆஸ்திரேலியா வந்துள்ள சீனப் போர்க்கப்பல்கள் சிட்னி துறைமுகத்தில் நான்கு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.